மகாத்மா காந்தி பிறந்த தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை (அக்டோபா் 2) நடைபெறுகிறது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலாண்டுக்கு ஒருமுறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபா் 2 ஆம்தேதி காந்தி பிறந்த தினத்தன்று மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில், ஊரகப் பகுதிகளில் மழை நீா் சேகரிப்பு நடத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிமராமத்து பணிகள், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம், நிதி செலவினங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தியை தடை செய்தல், முழு சுகாதார தமிழகம் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்தும் விவாதிக்கப்பட்டு கடந்த நிதியாண்டிற்கான ஊராட்சி தணிக்கை அறிக்கையும் வெளியிடப்படுகிறது.
எனவே, இக்கிராமசபைக் கூட்டங்களில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊராட்சிப் பகுதிகைளைச் சோ்ந்த பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்து பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.