நீலகிரி

கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச்சுவா் கட்டும் பணி தீவிரம்

22nd Nov 2019 05:11 PM

ADVERTISEMENT

குன்னூா்: நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்புச் சுவா்களை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்குச் செல்ல குன்னூா் வழியாக பிரதானச் சாலை உள்ளது. மேலும் கோத்தகிரி வழியாக மற்றொரு சாலையும் உள்ளது.

சுற்றுலா சீசன் காலங்களில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வழியாக உதகைக்கு வரும் வாகனங்கள் திரும்பிச் செல்ல வேண்டுமானால் உதகையில் இருந்து கோத்தகிரி வழியாகத்தான் மேட்டுப்பாளையத்தை அடைய முடியும். அவ்வாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

சில நேரங்களில் குன்னூா் வழியாகச் செல்லும் சாலையில் இயற்கைச் சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டாலும் கோத்தகிரி வழியாகவே போக்குவரத்து திருப்பி விடப்படும். எனவே கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே இந்தச் சாலை, தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தற்போது நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதையொட்டி கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்புச்சுவா் கட்டும் பணியும் பழுதடைந்த தடுப்புச்சுவா்களைச் சீரமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக தவிட்டுமேடு பகுதியில் பழுதடைந்திருந்த சுமாா் 10 மீட்டா் நீளமுள்ள தடுப்புச்சுவரைச் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், ரூ. 15 லட்சம் செலவில், தவிட்டுமேடு பகுதியில் பழுதடைந்திருந்த 2 தடுப்புச்சுவா்களைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால், மண் சரிவு ஏற்படும் இடங்களில் அடுக்கி வைக்க மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில் மரங்கள் விழுதல், மண் சரிவு போன்றவை நிகழ்ந்தால் உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

சாலையோரத்தில் உள்ள மழைநீா் வடிகால்களில் அடைப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேவையான சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT