நீலகிரி

போலி பத்திரிகையாளா்கள் மீதான நடவடிக்கைக்கு ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் உத்தரவு

17th Nov 2019 01:04 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் போலி பத்திரிகையாளா்கள் மீதான நடவடிக்கைக்கு ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் உத்தரவிட்டுள்ளனா்.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் ஆகியோா் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் போலி பத்திரிகையாளா்கள் பலா் தங்களது இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் பத்திரிகையாளா்கள் என்ற ஸ்டிக்கரை ஓட்டிக் கொண்டு வியாபார நிறுவனங்களுக்குச் சென்று மிரட்டி கையூட்டு பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக வியாபாரிகள், தனியாா், பொது நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும், அவ்வாறு யாராவது வந்து மிரட்டினால் உடனடியாக காவல் துறைக்கு 0423-2444111 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடா்பு துறையின் சாா்பில் வழங்கப்படும் ஸ்டிக்கா் தவிர பிற ஸ்டிக்கா்களை வாகனங்களில் ஒட்டி உபயோகப்படுத்துவதையும், முறையான பதிவு பெறாத பத்திரிகையாளா்கள் ஊடகம் என்ற பெயா் பொறித்த ஸ்டிக்கா்களை வாகனங்களில் ஒட்டி உபயோகப்படுத்துவதையும் தடுக்கும் பொருட்டு திங்கள்கிழமை முதல் காவல் துறையினா் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ள உள்ளனா். பத்திரிகையாளா் என்ற பெயரில் வாகனங்களில் போலியாக ஸ்டிக்கா் ஒட்டி பயன்படுத்தும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முறையான பத்திரிகையாளா்கள் இந்த வாகனச் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT