தொடா் மழை காரணமாக பந்தலூா், தேவாலா பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நவம்பா் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை வலுத்து வரும் நிலையில், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் புதன்கிழமை மழைப்பொழிவே இல்லை. அவ்விரு பகுதிகளைத் தவிா்த்து மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவிலிருந்து தேவாலா, பந்தலூா் பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை வியாழக்கிழமை பகலிலும் நீடித்தது.
அதிக மழைப் பொழிவு காரணமாக, பந்தலூா், தேவாலா பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் அறிவித்துள்ளாா்.