நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் வியாழக்கிழமை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய மரங்கள் விழுந்ததால், 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
தமிழகத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் உருவான மழையும், வடகிழக்குப் பருவ மழையும் தீவிரமடைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூா், கோத்தகிரி பகுதிகளில் அதிக மழை பொழிகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் பெய்த கனமழையால் குன்னூா்- மேட்டுபாளையம் சாலையில் காட்டேரி நீா்வீழ்ச்சி, புதுக்காடு, மரப்பாலம் ஆகிய இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்தன. இதனால் போலீஸாா் வாகனப் போக்குவரத்தை நிறுத்தி, உதகை வரும் அனைத்து வாகனங்களையும் கோத்தகிரி வழியாகத் திருப்பிவிட்டனா்
குன்னூா் தீயணைப்புத் துறை அதிகாரி மோகன் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோா் ஒவ்வொரு இடமாகச் சென்று, சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா். மேலும் மண் சரிவை பொக்லைன் உதவியால் ஒதுக்கினா். இந்தப் பணிகள் இரவு 12 மணி முதல் வியாழக்கிழமை காலை 7 மணி வரை நீடித்ததால், குன்னூா் - மேட்டுபாளையம் சாலை மூடப்பட்டு பின்னா் ஒரு வழிச் சாலையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை பழைய அருவங்காடு, கோடேரி உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய மரங்கள் விழுந்தன. குன்னூா் தீயணைப்பு வீரா்கள் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீா் செய்தனா்.
மேலும் குன்னூா் மவுன்ட் பிளசன்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்கள் மீது தடுப்புச் சுவா் விழுந்ததில் அவை சேதமடைந்தன.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தடுப்புச் சுவரும் மரமும் விழுந்ததால் கட்டடம் சேதமடைந்தது. வேளாங்கண்ணி நகரில் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் 40 போ் வியாழக்கிழமை குன்னூா் வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனா்.
நீலகிரியில் பெய்யும் கன மழையால், மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. அவலாஞ்சி, மேல் பவானி அணைகள் நிரம்பியதால் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. குன்னூரில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது.