உதகை சாலைகளில் கால்நடைகள் திரிந்தால்  உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

உதகை நகரச் சாலைகளில் மே 5 ஆம் தேதிக்குப் பின் கால்நடைகள் திரிந்தால் அவற்றின் உரிமையாளர்கள் மீது

உதகை நகரச் சாலைகளில் மே 5 ஆம் தேதிக்குப் பின் கால்நடைகள் திரிந்தால் அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அபராதமும் விதிக்கப்படும் என உதகை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதுகுறித்து உதகை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
உதகை நகரப் பகுதி சர்வதேச சுற்றுலாப் பகுதியாக விளங்குவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனர். அத்துடன் தற்போது கோடை சீசனும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. 
உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குதிரைகள், ஆடு மற்றும் மாடுகள் போன்ற கால்நடைகள் சாலைகளில்  போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் திரிந்து வருகின்றன. இதுதொடர்பாக கால்நடைகள் வளர்ப்போரிடம் கூறியும் அவர்கள் இதைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை இனி சாலைகளில் திரிய விடக்கூடாது. இந்த உத்தரவை மீறி மே 5 ஆம் தேதிக்குப் பின்னர் உதகை நகரச் சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் அவற்றின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.  மேலும், கால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் முதல்முறை என்றால் ரூ.100,  இரண்டாவது முறை என்றால் ரூ.5,000, மூன்றாவது முறை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதமாக 
விதிக்கப்படுவதோடு அந்த கால்நடைகள் நகரிலில் இருந்தே அப்புறப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com