நீலகிரி

நீலகிரியில் ஆகஸ்ட் 7, 9இல் பள்ளி,  கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி: ஆட்சியர் தகவல்

30th Jul 2019 08:32 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் ஆகஸ்ட் 7, 9ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடம் தமிழில் பேச்சாற்றலையும்,  படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட  அளவில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. 
நடப்பாண்டில் நீலகிரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் உதகையிலுள்ள சிஎஸ்ஐ சிஎம்எம் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ளன.
கல்லூரி மாணவ, மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் உதகையில் பிங்கர்போஸ்டிலுள்ள அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் ஆகஸ்ட 9ஆம் தேதி நடைபெறவுள்ளன. மேல்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு போட்டிக்கும் தலா ஒருவர் வீதம் 3 மாணவ, மாணவியர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் கல்லூரி முதல்வர், பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து  ஆளறிச்சான்று பெற்றுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
வெற்றிபெறுவோருக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாவது பரிசாக ரூ. 7,000, மூன்றாவது பரிசாக ரூ. 5,000  வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள்  மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவர்களாவர். இப்போட்டிகளில்  அதிக அளவிலான பள்ளிகள் பங்கேற்க வேண்டும்  என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT