குன்னூர் ராணுவப் பயிற்சிக் கல்லூரி அருகே 2 சிறுத்தைகள் நடமாடுவது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவப் பயிற்சி கல்லூரி அருகே அடர்ந்த வனப் பகுதி உள்ளது.
ராணுவ முகாமில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று
வருகின்றனர்.
கல்லூரி அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை ராணுவ வீரர்கள் திங்கள்கிழமை பரிசோதித்தபோது, கல்லூரி அருகேயுள்ள சாலையில் இரண்டு சிறுத்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து வனத் துறைக்கு ராணுவ கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ராணுவ கல்லூரி வளாகத்தில் வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் கூண்டுவைத்துப் பிடிக்க வனத் துறையினர் முடிவு செய்துள்ளனர். சிறுத்தைகள் நடமாட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.