உதகையில் படகு இல்ல ஏரியில் தற்கொலை செய்து கொண்ட இரு இளைஞர்களின் சடலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன.
உதகை அருகே உள்ள காந்தல், குருசடி காலனி பகுதியில் வசித்து வந்தவர்கள் கௌதம் (24), டென்னிஸ் (22). இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் படகு இல்லத்தில் படகு ஓட்டுநர்களாக பணியாற்றுபவர்கள் தேனிலவு படகு இல்லம் பகுதிக்கு சவாரிக்காக வியாழக்கிழமை சென்றபோது இருவரது சடலங்கள் நீரில் மிதந்ததைக் கண்டு படகு இல்ல அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.
இதில், சடலமாக மீட்கப்பட்டது தேடப்பட்டு வந்த கௌதம், டென்னிஸ் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவர் மீது காவல் துறையில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளதாகவும், இந்த வழக்குகள் தொடர்பாக உதகை நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என இவர்களது நண்பர்கள் கூறியிருந்ததால், அதற்கு பயந்து இருவரும் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.