நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள குந்தலாடி அரசு ஆரம்பப் பள்ளியில் பழங்குடியினர் விழிப்புணர்வு, குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் வருவாய்த் துறை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு வழக்குரைஞர் கணேசன் தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார்.
வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் தலைவர் காளிமுத்து, இணைச் செயலாளர் பொன் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் பழங்குடியினர்களிடம் மனுக்களை பெற்று பேசியதாவது:
பழங்குடியினருக்கு அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன்படி பழங்குடியினருக்கு வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் இல்லாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும். நீலகிரிக்கு குடிநீர் தேவைக்கு தற்போது ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குடிநீர் பிரச்னைகளுக்கு உள்ளாட்சிகள் மூலம் தீர்வு காணப்படும். நியாயவிலை கடைகளில் தற்போது முழு அளவு அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பணிகளில் சேர பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தற்போது வனத் துறையில் 99 காலிப் பணியிடங்களை பழங்குடியினருக்கு ஒதுக்கி உள்ளது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கூடலூரில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை பழங்குடியினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.
உப்பட்டி தொழிற்பயிற்சி மைய பயிற்றுநர் கனகசுந்தரம் தொழிற்பயிற்சிகள் குறித்து பேசினார். நெலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அசோக், கிராம சுகாதார செவிலியர், குந்தலாடி தமிழ் சங்க செயலாளர், நிர்வாகிகள், குந்தலாடி, ஒர்க்கடவு, தானிமூலா, பழையூர், கடலைகொல்லி, மங்கம்வயல், புத்தூர்வயல், அம்பலபாடி, குன்றிகடவு, நெல்லியாளம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பாலன் நன்றி கூறினார்.