குன்னூர் அருகே கேத்தொரை கிராமத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த குட்டியைக் காப்பாற்ற தாய் காட்டெருமை கிணற்றில் இறங்கி போராடியது. இதில் குட்டி உயிரிழந்த நிலையில், தாய் காட்டெருமையை வனத் துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள கேத்தொரை கிராமத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் காட்டெருமை குட்டி ஒன்று தவறி விழுந்தது. இதையடுத்து, தாய் காட்டெருமையும் கிணற்றில் இறங்கி குட்டியை மீட்க போராடியது.
ஆனால், அதன் முயற்சி பலனளிக்காததால் குட்டி உயிரிழந்தது. குட்டி இறந்தது தெரியாமல் அதனை சுற்றி வந்த தாய் காட்டெருமையை அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்கு பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் பார்த்து வனத் துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக, அப்பகுதிக்கு வந்த வனத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 200 அடி பள்ளத்தில் சிக்கி தவித்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், குட்டியை விட்டு தாய் காட்டெருமை விலகி போகாததால் முதலில் இறந்த குட்டியை பொக்லைன் இயந்திரம் மூலம் மேலே கொண்டு வந்தனர். பின்னர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தாய் காட்டெருமையை கிணற்றில் இருந்து மேலே கொண்டுவர பாதை அமைத்தனர்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு வரை போராடி காட்டெருமையை மீட்ட னத் துறையினர் அதனை வனப் பகுதிக்குள் விரட்டினர்.