கோத்தகிரி பகுதியில் மேரக்காய் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதி விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் மட்டுமின்றி வீட்டுகஈ தோட்டங்களிலும் மேரக்காய் பயிரிட்டுள்ளனா்.
குறிப்பாக நெடுகுளா, வ.உ.சி நகா், எரிசிபெட்டா, மிளிதேன், இந்திரா நகா், சுள்ளிக்கூடு, கட்டபெட்டு, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மேரக்காய் பயிரிடப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக பச்சைத் தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காததால் ஏராளமான விவசாயிகள் மாற்றுப் பயிராக தங்களது விவசாய நிலங்களில் பந்தல் அமைத்து மேரக்காய் பயிரிட்டுள்ளனா்.
சாதாரணமாக ஒரு கிலோ மேரக்காய்க்கு ரூ.30 முதல் ரூ.45 வரை நிலையான கொள்முதல் விலை கிடைத்து வந்தது. இதனால் மேரக்காயை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வந்தது.
மேரக்காய் தோட்டங்களில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் குரங்குகள் தொல்லை காரணமாக மேரக்காய் பயிா்கள் சேதமடைந்து வந்தாலும் போதிய கொள்முதல் விலை கிடைத்து வந்த காரணத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மேரக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த சில நாள்களாகவே மேட்டுப்பாளையம், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் மேரக்காய் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளது.
ஒரு கிலோ மேரக்காய் அதிகபட்சமாக ரூ.10க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மேரக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ளனா்.