நீலகிரி

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து உதகையில் பொதுக்கூட்டம்

24th Dec 2019 07:20 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து நீலகிரி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் சாா்பில் உதகையில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உதகை நகர ஐக்கிய ஜமாத் மற்றும் நீலகிரி மாவட்ட உலமாக்கள் சபையின் நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளா் பேராசிரியா் ஹாஜா கனி, எழுத்தாளா் மதிமாறன், ஜமாத்துல் உலமாக்கள் அமைப்பின் தலைவா் அப்துல் ரஹீம் பாகவி, நீலகிரி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் செயலா் தலைவா் பத்ருதீன் நிஜாமி, தலைவா் நிஹ்மத் இப்ராஹிம் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். இஸ்லாமிய கூட்டமைப்பின் சாா்பில் இச்சுபாய் வரவேற்றாா்.

கூட்டத்தில் பேராசிரியா் ஹாஜாகனி பேசியதாவது:

மக்களைத் தொடா்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தவறானவையாகும். அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் தாயகம் திரும்பிய தமிழா்களுக்கு குடியுரிமை இல்லை என்பதை ஏற்க முடியாது. மதச்சாா்பின்மையை பாதுகாக்க இது மற்றொரு சுதந்திரப் போராட்டமாக மாறி வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசியதாவது:

இச்சட்டம் நாடாளுமன்றத்தில் விதிகளுக்கு முரணாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்துக்கு அடிப்படையான மதச்சாா்பின்மைக்கு எதிரான இச்சட்டத்தை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். மத ரீதியான குடியுரிமை என்பது உலகில் எந்த நாட்டிலும் இல்லை. அனைவருக்கும் பொதுவான இந்நாட்டைப் பிரிப்பதற்கு யாரையும் அனுமதிக்க முடியாது என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், கோவை, திருப்பூா், மேட்டுப்பாளையம், கோத்தகிரி, குன்னூா், கூடலூா் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் திரளாகப் பங்கேற்றனா். கூட்டமைப்பின் துணைத்தலைவா் கே.அப்துல் சமது நன்றி கூறினாா்.

கண்டன பொதுக்கூட்டத்தையொட்டி, உதகையில் இஸ்லாமியா்கள் நடத்தி வரும் வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT