நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் திரும்பும் இயல்பு நிலை: மலைத் தோட்டக் காய்கறிகள் பயிரிடுவதில் தீவிரம்

30th Aug 2019 07:11 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. மலைத் தோட்டக் காய்கறிகள் பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டிவருவதால் இன்னும் இரண்டு  மாதங்களில் மலைத்  தோட்டக் காய்கறிகளின் வரத்து சீராகும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.   
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் உருளைக் கிழங்கு , கேரட் , பீட்ரூட் , முள்ளங்கி , பீன்ஸ்,உள்ளிட்ட காய்கறிகள் வெளி மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 500க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவிலான காய்கறித் தோட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இங்கு பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள் முழுவதும் சேதமடைந்தன. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதால் இங்குள்ள காய்கறித் தோட்டங்களில் மீண்டும் காய்கறிகளை பயிரிடும் பணிகளில்  தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்னும்  இரண்டு மாதங்களில் மலைக் காய்கறிகளின் வரத்து வழக்கம்போல் சீராகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT