நீலகிரி

குதிரைப் பந்தய மைதான இடமாற்ற விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு

29th Aug 2019 07:21 AM

ADVERTISEMENT

கோத்தகிரியில் கடைக்கம்பட்டி பகுதியில் குதிரைப் பந்தய மைதானம் அமைக்க அரசு முயற்சி செய்வது குறித்து ஆலோசிக்க வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட திமுக செயலர் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளதாவது:
உதகையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க உதகையிலுள்ள குதிரைப் பந்தய மைதானத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முறைப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.  அதேசமயம், உதகையிலுள்ள குதிரைப் பந்தய மைதானத்தை கோத்தகிரியில்  நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட கடைக்கம்பட்டியில் அமைத்திட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு அப்பகுதி  மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், நீலகிரி மாவட்ட திமுக சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இப்பிரச்னையில், அரசு நிர்வாகம், நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும், கோத்தகிரி பகுதிக்கு குதிரைப் பந்தய மைதானத்தைக் கொண்டுசெல்லும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வியாழக்கிழமை காலை உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று முபாரக் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT