குன்னூர் மார்க்கெட் பகுதியில் உள்ள 15 கடைகளில் இருந்து காலாவதியான 2 டன் மாட்டிறைச்சியை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் விற்பனை செய்யப்படும் மாட்டிறைச்சி தரமற்றதாவும், எலிகள் கடித்த இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் தங்க விக்னேஷ், குன்னூர் நகர நல அலுவலர் ரகுநாதன், சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் மாட்டிறைச்சி விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு எலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததும், காலாவதியான மாட்டிறைச்சி கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததையும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, காலாவதியான 2 டன் மாட்டிறைச்சியை பறிமுதல் செய்த அலுவலர்கள் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் புதைத்தனர். மேலும், தரமற்ற இறைச்சி விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்து, அபராதம் விதிக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.