கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சிரமம் கொடுத்து வந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்து வந்து முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் புகுந்து தொந்தரவு செய்துவந்த காட்டு யானை குரோவரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனர். அதனை இரவோடு இரவாக முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டுவந்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
ஒசூர் பகுதியில் பலரைக் கொன்ற அந்த யானை மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கே வந்துவிடுமோ என்ற அச்சம் முதுமலை வட்டாரக் கிராம மக்களுக்கு வந்துவிட்டது. இதையடுத்து, கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி தலைமையில் கோட்டாட்சியர் கே.வி.ராஜ்குமாரைச் சந்தித்து, அந்த யானையை முகாமில் அடைத்துப் பழக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதுகுறித்து எம்எல்ஏ திராவிடமணி கூறியதாவது:
ஒசூர் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற காட்டு யானையை முதுமலை வனப்பகுதியில் விடுவித்தது தவறு. எந்தவித முன்னறிவிப்புமின்றி இரவோடு இரவாக அதைக் கொண்டுவந்துள்ளனர். இதனால் புலிகள் காப்பக வனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. மீண்டும் அதைப் பிடித்து முகாமில் அடைத்து கும்கியாக மாற்ற வேண்டும் என்றார்.