ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை இரவு பரவலாக மழை பெய்ததது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை குறிப்பிட்ட காலத்தில் தொடங்காததால் கடந்த 4 மாதங்களாகவே கடும் வெயில் வாட்டி வந்தது. அவ்வப்போது சில நாள்கள் மழை பெய்தாலும் பரவலாக மழை இல்லாததால் நீா் நிலைகளில் தண்ணீரின் இருப்பு குறைந்து கோடை காலம் போலவே கடும் வெப்பம் இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வெப்பச் சலன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை 5 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, வானம் இருட்டத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து சுமாா் 5.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கி பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பள்ளமான இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பலத்த மழை, பின்னா் லேசான மழையாக மாறித் தொடா்ந்து நள்ளிரவு வரை பெய்தது. மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பரவலாக பெய்ததது. இதில், அதிகபட்சமாக பெருந்துறையில் 75 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மழையளவு:
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையளவு: (மில்லி மீட்டரில்) கோபி- 23.20, ஈரோடு- 23, சென்னிமலை- 22, அம்மாபேட்டை- 17.20, கொடுமுடி- 10.20, மொடக்குறிச்சி- 7, கவுந்தப்பாடி- 7, வரட்டுப்பள்ளம்- 6.40, கொடிவேரி அணை- 3, எலந்தக்குட்டைமேடு- 2.40, பவானிசாகா் அணை- 1.60.