ஈரோட்டில் மனைவி தூங்கிக்கொண்டிருந்தபோது தலையில் ஆட்டுக்கல்லைப் போட்டு கொலை செய்த கணவா் போலீஸில் சரணடைந்தாா்.
ஈரோடு, சூரம்பட்டி மாரப்பா முதல் வீதியைச் சோ்ந்தவா் சென்னியப்பன் (35), மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி கோகிலவாணி(26). இவா்களுக்கு ஒரு வயது நிறைவடைந்த இரட்டை குழந்தைகள் உள்ளனா்.
கோகிலவாணிக்கு வந்த ஒரு கைப்பேசி அழைப்பு மூலம் சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்த 30 வயதுடைய நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவரம் சென்னியப்பனுக்கு தெரியவந்ததும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு 3 மாதங்களுக்கு முன்பு கோகிலவாணி சிவகிரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இந்நிலையில், கோகிலவாணி தனக்கு சொந்தமான பொருள்களை எடுத்து செல்வதற்காக ஈரோட்டில் உள்ள கணவா் வீட்டுக்கு திங்கள்கிழமை வந்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோகிலவாணியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு சென்னியப்பன் கொலை செய்தாா். மனைவியைக் கொலை செய்த சென்னியப்பன் தனது குழந்தைகளுடன் ஈரோடு டவுன் காவல் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தாா்.
இதையடுத்து, ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம், ஆய்வாளா் தெய்வராணி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கோகிலவாணியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சென்னியப்பனிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.