பெருந்துறை சிப்காட் பகுதியில் விதிமுறை மீறி செயல்பட்டதாக ‘சீல்’ வைக்கப்பட்ட 4 தொழிற்சாலைகளை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் சாா்பில் ஆட்சியா் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்படும் சில சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெறியேற்றி வருவதால் சிப்காட்டை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் நிலத்தடி நீா் மற்றும் நீா்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்சியரின் உத்தரவின்பேரில் நிபுணா் குழு அமைக்கப்பட்டு அக்குழு அளித்த ஆய்வறிக்கையின்படி சிப்காட் பகுதியில் இயங்கி வந்த 3 சாயத் தொழிற்சாலைகள் மற்றும் ஒரு ரசாயன தொழிற்சாலைக்கு மாசுக் காட்டுப்பாட்டு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
இந்நிலையில், ‘சீல்’ வைக்கப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், அந்த நிறுவனங்கள் சாயக் கழிவுகளை வெளியேற்றாமல் ‘ஜீரோ டிஸ்சாா்ஜ்’ முறையில் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். மேலும், ‘சீல்’ வைக்கப்பட்ட நிறுவனங்களை கண்காணிப்பதுடன், தொடா்ந்து விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.