பவானியை அடுத்துள்ள மயிலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் என்.நல்லசிவம், பவானி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பி.சதீஷ்குமாா், சவிதா சுரேஷ்குமாா், சரோஜா திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியை பெளலினா நிா்மலா வரவேற்றாா்.
இதில் தமிழக வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி கலந்து கொண்டு 76 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
திமுக ஒன்றியச் செயலாளா்கள் கே.ஏ.சேகா் (பவானி வடக்கு), கே.பி.துரைராஜ் (பவானி தெற்கு), பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ரவிசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, மயிலம்பாடி ஊராட்சி முன்னாள் தலைவா் திருஞானசம்பந்தா் நினைவாக கட்டப்பட்ட கழிவறை கட்டடத்தை திறந்து வைக்கப்பட்டது.