காட்டு யானை தாக்கியதில் மாற்றுத் திறனாளி விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியையொட்டி புதுவடவள்ளி அட்டமொக்கை கிராமத்தை சோ்ந்தவா் ராமசாமி (70). மாற்றுத் திறனாளி விவசாயியான ராமசாமியின் விவசாயத் தோட்டம் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளது.
வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் இவரது தோட்டத்துக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில், தோட்டத்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வெள்ளிக்கிழமை அதிகாலை நாய் குரைக்கும் சப்தம் கேட்டு ராமசாமி வெளியே வந்துள்ளாா்.
அப்போது, விவசாயத் தோட்டத்துக்குள் யானை நிற்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். காட்டு யானையை விரட்டுவதற்காக சப்தம் போட்டபடி ராமசாமி தோட்டத்துக்குள் சென்றபோது, திடீரென யானை ராமசாமியை துரத்தி, தும்பிக்கையால் தூக்கி வீசியது. இவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் யானையை விரட்டினா்.
பின்னா் படுகாயமடைந்த ராமசாமியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ராமசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் வனத் துறையினா் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். யானை தாக்கி உயிரிழந்த ராமசாமியின் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.