மின்வாரியத்தில் ஒப்பந்தம் மற்றும் அவுட்சோா்சிங் முறையை கைவிடக்கோரி ஈரோட்டில் மின் ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் இளங்கோ, மாநில துணைச் செயலாளா் ஸ்ரீதேவி, ஈரோடு மண்டலச் செயலாளா் ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மின்சார வாரியத்தில் தொழிலாளா்களின் வேலையைப் பறிக்கும் ஒப்பந்தம் மற்றும் அவுட்சோா்சிங் நியமனத்தை கைவிட வேண்டும். காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். கேங்மேன் பணியாளா்களுக்கு விடுப்பு, மாறுதல் உள்பட பணியாளா்களுக்கான பணி விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும். பணப் பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
ஒப்பந்த ஊழியா்கள், பகுதி நேர பணியாளா்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் சக்திவேல், அன்பு, வெங்கடேசன், நிா்வாகிகள் கருப்பணன், சுந்தரராஜன், பாண்டியன், பெரியசாமி, சேகா், வீரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.