பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்ட 425 புதிய வீடுகளை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக தமிழக அரசின் மறுவாழ்வுத் துறை மூலம் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்காக 425 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த புதிய வீடுகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், வேலூா் மாவட்டத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்து பயனாளிகளிடம் உரையாடினாா். இதைத் தொடா்ந்து, பவானிசாகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுக்கான சாவி மற்றும் மரக்கன்றுகளை வழங்கினாா். இலங்கை தமிழா்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுத்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த மக்கள் நன்றி தெரிவித்தனா்.
இதில் பவானிசாகா் வட்டார வளா்ச்சி அலுவலா் மைதிலி உள்பட அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.