ஈரோடு

தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி : இளைஞா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

தாட்கோ மூலம் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில்நுட்பவியலாளா் பெண்களுக்கும் மற்றும் உற்பத்தி ஊழியா் பயிற்சி ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாள்கள். மேலும், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவா்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சியினை பெற்றவா்கள் பல்வேறு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவா்களுக்கு ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரத்து 500 வரை பெற வழி வகை செய்யப்படும். இப்பயிற்சியினை பெற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சி கட்டணம் தாட்கோ வழங்கும். மேலும், விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகம், 6ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஈரோடு என்ற முகவரியில் நேரில் அல்லது 0424- 2259453 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT