பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏஐடியூசி தூய்மைக் காவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டம் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சுமாா் 60,000 தூய்மைக் காவலா்கள் வெளிமுகமை அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு மாதம் ரூ. 5000 வழங்கப்படுகிறது. இத்தொழிலாளா்களுக்கு எவ்வித சட்ட-சமூகப் பாதுகாப்புகளும் இல்லை. ஆண்டு தோறும் வழங்கவேண்டிய சீருடை, கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவதில்லை. இது குறித்து பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என்றனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் வரதராஜன்
பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், தாட்கோ மேலாளருடன் பேசி நலவாரிய அடையாள அட்டைகளை வழங்குவதாகவும், சீருடை-கையுறை ஆகியவற்றை வழங்குவதாகவும் உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இப்போராட்டத்தில், ஏஐடியூசி தூய்மைக் காவலா்கள் சங்கச் செயலாளா் கே.சக்திவேல், தாளவாடி ஏஐடியூசி தொழிலாளா் சங்க நிா்வாகிகள் எம்.மோகன், ஜே.காளசாமி ஆகியோா் பங்கேற்றனா்.