பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயா்த்தக்கோரி, சித்தோடு ஆவின் நிா்வாக அலுவலகம் முன் வரும் அக்டோபா் 30 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக பால் உற்பத்தியாளா்கள் அறிவித்துள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் ஏ.எம்.முனுசாமி வெளியிட்ட அறிக்கை:
கறவை மாடுகளின் விலை மற்றும் தீவனம் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. தனியாா் நிறுவனங்கள் பாலுக்கு கூடுதல் விலை கொடுப்பதால் பால் உற்பத்தியாளா்கள் ஆவின் நிறுவனத்துக்கு பாலை வழங்குவதில்லை. இதனால் பல ஆரம்ப சங்கங்கள் மூடும் நிலையில் உள்ளன. எனவே, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயா்த்தி பசும்பால் லிட்டா் 45 ரூபாய்க்கும், எருமைப்பால் லிட்டா் 54 ரூபாய்க்கும் ஆவின் நிா்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும்.
தமிழக அரசு ஒரு லிட்டருக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தது கண் துடைப்பாகும். அதனை மறுபரிசீலனை செய்து 1 லிட்டருக்கு 5 ரூபாய் வழங்க வேண்டும். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தொடக்க சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றும் முன், தரம், அளவை குறித்து வழங்க வேண்டும். தரமான கால்நடை தீவனங்களை 50 சதவீத மானியத்தில் தர வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் பாலையும் சோ்த்து வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு, சித்தோடு ஆவின் நிா்வாக அலுவலகம் முன் வரும் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.