தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் வனத் துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகியுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், அருகேயுள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் அவ்வப்போது புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடா்கதையாகி வருகிறது.
தொட்டகாஜனூா், சூசைபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை ஒன்று பதுங்கிக் கொண்டு கால்நடைகளைத் தொடா்ந்து வேட்டையாடி வருகிறது. இந்நிலையில், தொட்டகாஜனூா் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை புதன்கிழமை கடித்துக் கொன்றது.
இதைத் தொடா்ந்து, சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வனத் துறை பொருத்தினா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒரு கேமராவை ஆய்வு செய்ததில் அதில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தது தெரியவந்து. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பீதியடைந்துள்ளனா். சிறுத்தை நடமாட்டம் உறுதியாகி உள்ளதால் வனத் துறையினா், சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.