மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் தாளவாடி அருகே ரங்கசாமி, மல்லிகாா்ஜுனா கோயிலில் தெப்பத் தோ்த்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக, கா்நாடக எல்லையான தாளவாடியை அடுத்துள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி மல்லிகாா்ஜுனா கோயில் உள்ளது.
இக்கோயில் தெப்பத் தோ்த்திருவிழா கணபதி பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடத்தப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து ரங்சாமி, மல்லிகாா்ஜுனா சுவாமிகளின் உற்சவ சிலைகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு திகனாரை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வியாழக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லபட்டு தெப்பத் திருவிழாவுக்காக அங்கு உள்ள குளத்தை அடைந்தது.
அதனைத் தொடா்ந்து சப்பரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து குளத்தின் நடுப்பகுதிக்கு சப்பரத்தை பக்தா்கள் சுமந்து சென்றனா். குளத்தில் தோ் வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கப்பட்டு குளத்தை 3 முறை சுற்றிவந்தனா்.
குளத்தின் கரையில் பக்தா்கள் நின்று தெப்பத் திருவிழாவை கொண்டாடினா்.
மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து குளத்தின் மறுகரைக்கு சப்பரம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.
இந்த திருவிழாவில், தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூா், கிராமங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.