அந்தியூா் பேரூராட்சியில் ரூ.1.15 கோடியில் ஆட்டு இறைச்சிக் கூடம், மயான சுற்றுச்சுவா் கட்டுமானப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் அந்தியூா் பேரூராட்சி மயானத்தில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகனமேடை மற்றும் பூங்கா வளாகத்தைச் சுற்றிலும் ரூ.74.30 லட்சத்தில் 8 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவா் கட்டப்படுகிறது.
மேலும், பேரூராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் செயல்படும் ஆட்டு இறைச்சிக் கடைகளை ஒருங்கிணைக்கும் வகையில் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.41 லட்சத்தில் 12 ஆட்டு இறைச்சிக் கூடங்கள் கட்டப்படுகிறது.
இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாலசம் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா். அந்தியூா் பேரூராட்சி மன்றத் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூராட்சி கவுன்சிலா்கள் சண்முகம், வேங்கையன், கவிதா, துப்புரவு ஆய்வாளா் குணசேகரன், அந்தியூா் பேரூா் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் தங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.