பெருந்துறை: சென்னிமலை அருகே வாய்க்காலில் மிதந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு மேட்டுப்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் திங்கள்கிழமை காலை மிதந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வெள்ளோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், உயிரிழந்த பெண் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.