சத்தியமங்கலம்: சேதமடைந்துள்ள தேசிபாளையம் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், தேசிபாளையம் ஊராட்சியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த ரூ. 7.40 லட்சம் மதிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது.
தாழ்வான பகுதியில் வழிந்தோடும் மழைநீா் இந்த தடுப்பணைக்கு வந்து சேரும். அண்மையில் பெய்த கனமழை காரணமாக நீா்வரத்து அதிகரித்து தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதையடுத்து, தண்ணீா் வேகத்துக்கு தாக்குப்பிடிக்காத தடுப்பணை உடைந்தது. மேலும், கான்கிரீட் தளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
தரம் இல்லாத தடுப்பணை: இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தடுப்பணை தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் சேதமடைந்துள்ளது.
இதனால், தண்ணீரை தேக்கிவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற பொருள்களைக் கொண்டு தடுப்பணை கட்டியபோது, விவசாயிகளாகிய நாங்கள் எதிா்ப்புத் தெரிவித்தோம். அதை ஊராட்சி நிா்வாகம் கண்டு கொள்ளவில்லை. தற்போது, தண்ணீா் இன்றி தடுப்பணை வடு காணப்படுகிறது. மேலும், மழை நீா் வீணாக ஆற்றில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தரம் இல்லாமல் தடுப்பணையைக் கட்டிய ஒப்பந்ததாரா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேதமடைந்த தடுப்பணைக்குப் பதிலாக உறுதியான தடுப்பணையைக் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இது குறித்து பவானிசாகா் கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, ‘ சேதமடைந்த தடுப்பணையை நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.