ஈரோடு: ஈரோட்டில் கட்டட ஒப்பந்ததாரா் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (50), கட்டட ஒப்பந்ததாரா். இவா் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த 18- ஆம் தேதி கோவைக்குச் சென்றுள்ளாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது, வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கம், 10 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்துக்கு சண்முகசுந்தரம் தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில், சண்முகசுந்தரம் வீட்டின் முதல் தளத்தில் கதவைப் பூட்டி, சாவியை மறந்தபடி எடுக்காமல் சென்றதும்,
அந்த சமயத்தில் மா்ம நபா்கள் வீட்டுக்குள் நுழைந்து அலமாரியில் இருந்த பணம், நகைகளைத் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.