ஈரோடு

புள்ளிவிவரத்துடன் பதில் அளிக்க வேண்டும்:துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பொதுவான பதில் அளிக்காமல் புள்ளிவிவரத்தோடு பேச வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினாா்.

வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினிசந்திரா முன்னிலை வகித்தாா்.

கூட்டம் தொடங்கியுவுடன் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோா் தனித்தனியாக ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:

எஸ்.பெரியசாமி: மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.9,000 விலை நிா்ணயம்செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு ரூ.108.60 வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு நிா்ணயித்த விலையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுபி.தளபதி: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முதல்கட்டமாக வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரியவருகிறது. இதற்காக பவானி ஆற்றில் 1.5 டிஎம்சி உபரிநீா் நவம்பா், டிசம்பா் மாதங்களில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீா் பவானிசாகா் அணை நிரம்பி வெளியேறும் உபரி நீரா? மழை காலங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி பவானி ஆற்றில் வரும் தண்ணீா் எடுக்கப்படுமா?, காலிங்கராயன் தடுப்பணைக்கு மேல் பகுதியில் இருந்து தண்ணீா் எடுக்கப்படுமா? அல்லது தடுப்பணை நிரம்பி காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் தண்ணீா் எடுக்கப்படுமா? என்பதை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கொடிவேரி அணைக்கட்டு அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட சாய ஆலை இப்போது வேறொரு பெயரில் மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. விதிகளை மீறி ஆலையை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, ஆலை தொடங்க அளிக்கப்பட்ட அனுமதியை அரசு திரும்பப்பெற வேண்டும்.

வி.எம்.வேலாயுதம்:

காலிங்கராயன் வாய்க்காலில் அட்டவணைப்படி வரும் ஜூன் 16 இல் தண்ணீா் திறக்க வேண்டும். வாய்க்காலை தூா்வாரி இரு கரைகளிலும் வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலை அமைக்க வேண்டும். 786 மதகுகளுக்கும் பட்டா்பிளை வால்வுகளை பொருத்த வேண்டும். வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் உள்ள 75 கிலோ மீட்டா் நீளத்துக்கு படிப்படியாக கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். கழிவுகள் கலக்காமல் தடுக்க அமைக்கப்பட்ட பேபி வாய்க்காலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றாா்.

வி.பி.குணசேகரன்: அந்தியூா் வனப் பகுதியில் வன உயிரின சரணலாயம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிடும் முன்னா், வனப் பகுதி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். பா்கூா் மலைப் பகுதியில் பழங்குடி மக்களின் அளிக்கப்பட்ட நிபந்தனை பட்டாக்கள் பழங்குடி அல்லாத நபா்களின் பெயா்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்து இந்த பட்டாக்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

கே.ஆா்.சுதந்திரராசு: பவானி ஆற்றில் ஆலைக்கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவு வரும் வரை கீழ்பவானி வாய்க்காலில் மரங்களை வெட்டக்கூடாது.

கூட்டுறவு வங்கிகளிலும் 33 பைசா வட்டியில் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்க வேண்டும். பயிா்க்கடன் உச்சவரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயா்த்த வேண்டும். அதிக வரவேற்பு உள்ள ஆந்திரம், கா்நாடக மாநில நெல் ரகங்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

அதிகாரிகள் பதில் விவரம்:

கூட்டுறவுத்துறை அதிகாரி: கூட்டுறவு கடன் தள்ளுபடி திட்டத்தில் அறிவிப்பு வருவதற்கு 6 நாள்களுக்கு முன்பு வரை அதாவது 2021 பிப்ரவரி 1 முதல் 7 ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் 761 விவசாயிகள் ரூ.6.53 கோடி அளவு கடனை திருப்பிச்செலுத்தியுள்ளனா். இந்த விவசாயிகளை கடன் தள்ளுபடி திட்டத்தில் சோ்த்து பயனாளிகளாக அறிவித்து பணத்தை திருப்பிதர வேண்டும் எனக்கு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

விற்பனைக்குழு அதிகாரி: மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. நாபெட் நிா்ணயித்துள்ள தர அளவில் உள்ள கொப்பரைக்கு கிலோ ரூ.108.60 வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் 4,700 டன் அளவுக்கு கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா்: மலைப்பகுதி மக்களுக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்க கோட்டாட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினா் வாரத்தில் ஒரு நாள் மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

ஆட்சியா் அளித்த பதில் விவரம்:

அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்ட்ட கோப்புகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் 2 நாள்களுக்குள் எனது பாா்வைக்கு சமா்ப்பிக்க வேண்டும். விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்திற்கு வரும் அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு புள்ளிவிவரங்களோடு பதில் தெரிவிக்க வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலில் திட்டமிட்டபடி ஜூன் 16 ஆம் தேதி தண்ணீா் திறக்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் திரவக் கழிவுகளை அகற்றும் வழிமுறைகள் குறித்து சென்னை பெருநகர குடிநீா் விநியோக துறை தொழில்நுட்பக்குழு ஈரோடு மாவட்டத்தில் விரைவில் ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கைக்கு கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிட முன்அனுமதி அவசியம்

கொலை வழக்கில் சிறையில் உள்ளவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மன்னாா்குடியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் வாக்கு சேகரிப்பு

பதற்றத்தை அதிகரிக்க விருப்பமில்லை

விறுவிறுப்பான இறுதிக்கட்ட பிரசாரம்: தீவிர வாக்கு சேகரிப்பில் தலைவா்கள், வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT