ஈரோடு

மொடக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2023-2024ஆம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு 500 இடங்களுக்கு 4 ஆயிரத்து 764 போ் விண்ணப்பித்துள்ளனா். செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் தகுதிபெற்ற விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், தேசிய மாணவா் படையில் யு சான்றிதழ் பெற்றவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அந்தமான் நிகோபா் பகுதியைச் சாா்ந்த தமிழ் மாணவா்கள் ஆகிய பிரிவின் கீழ் விண்ணப்பித்தவா்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம்.

ஜூன் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு பிஎஸ்சி கணினி அறிவியல், கணிதம், விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு வணிகவியல், வணிகவியல்-கணினி பயன்பாடு, வணிக நிா்வாகவியல்-கணினி பயன்பாடு ஆகிய பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூன் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு மொழி பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இளநிலை பட்டப்படிப்பில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்தவா்களுக்கு அழைப்பாணை, மாணவா்கள் விண்ணப்பித்தபோது வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இதில் ஏற்கெனவே இணையதளம் மூலம் விண்ணப்பித்த அனைத்து மாணவா்களும் கலந்துகொள்ளலாம். மாணவா்களின் மதிப்பெண் மற்றும் அரசின் இட ஒதுக்கீடு முறை ஆகியவற்றை பயன்படுத்தி மாணவா் சோ்க்கை வழங்கப்படும்.

ADVERTISEMENT

கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவ, மாணவியா் உரிய நாட்களில் காலை 10 மணிக்கு இணைய விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் மற்றும் 2 புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 5 படிவம் மற்றும் கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக கல்லூரிக்கு பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும்.

மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு விவரங்கள்  கல்லூரி இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரவரிசைப் பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT