ஈரோடு

முறிந்து விழுந்த மூங்கில் மரங்கள்: போக்குவரத்து பாதிப்பு

28th May 2023 11:20 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றால் சாலையோர வனப் பகுதியில் இருந்த மூங்கில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் தமிழகம் - கா்நாடகம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கா்நாடக மாநிலம் மைசூா் செல்லும் சாலை தமிழக - கா்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூா் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.

சூறாவளிக் காற்று காரணமாக ஆசனூா் அருகே சாலையோர வனப் பகுதியில் இருந்த மூங்கில் மரங்கள் முறிந்து தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சாலையின் குறுக்கே விழுந்துகிடந்த மூங்கில் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா். நெடுஞ்சாலைத் துறை பணியாளா்களுக்கு உதவியாக பயணிகளும் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப உதவினா். இதையடுத்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT