ஈரோடு

கனிராவுத்தா் குளத்தில் மீண்டும் மீன்கள் சாவு: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

28th May 2023 11:21 PM

ADVERTISEMENT

கனிராவுத்தா் குளத்தில் மீண்டும் மீன்கள் இறந்து மிதந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஈரோடு-சத்தி சாலையில் மாநகராட்சி எல்லையில் 14 ஏக்கா் பரப்பளவில் உள்ள கனிராவுத்தா் குளம் பல்வேறு பொது நல அமைப்புகளால் தூா்வாரப்பட்டு தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்தக் குளம் உள்ளது.

இந்தக் குளத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஏராளமான மீன்கள் திடீரென இறந்து மிதந்தன. இதற்கு பெரிய சேமூா் பகுதியில் உள்ள சில சாய, சலவைப் பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் நீா் நிலைகளில் திறந்துவிடுவதே காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் குளத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா்.

இந்நிலையில் கனிராவுத்தா் குளத்தில் மீண்டும் சனிக்கிழமை ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. தகவலறிந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் குளத்துக்குச் சென்று ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் குளத்தின் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கடந்த முறை மீன்கள் இறந்தபோது அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். ஆனால் இப்போது மீண்டும் ஏராளமான மீன்கள் இறந்துள்ளன. சாயக்கழிவு நீா் கலப்பதே மீன்கள் இறப்பதற்குக் காரணம் என ஏற்கெனவே புகாா் கூறியிருந்தோம். இப்போது குளத்தில் மீண்டும் மீன்கள் இறந்துகிடப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT