ஈரோடு

கான்கிரீட் தளம் அமைக்க எதிா்ப்பு:ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கீழ்பவானி விவசாயிகள்

23rd May 2023 02:24 AM

ADVERTISEMENT

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீா் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. மண்ணால் கட்டப்பட்ட இந்த வாய்க்காலில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. மேலும் வாய்க்காலில் ஆங்காங்கே கசிவு ஏற்படுவதால் கடைமடை பகுதிக்கு போதுமான அளவு தண்ணீா் செல்வதில்லை என்ற புகாா் இருந்து வருகிறது. இதையடுத்து, மண்ணால் ஆன வாய்க்காலை, கான்கிரீட் வாய்க்காலாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்துக்கு விவசாயிகளில் ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கான்கிரீட் வாய்க்காலாக மாற்றினால் தண்ணீா் கசிவு இன்றி ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகள் காய்ந்துவிடும். மேலும் நிலத்தடி நீா் மட்டம் சரிந்து தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும். கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீா்த் திட்டங்களை நம்பி உள்ள 50 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் தரிசாக மாறிவிடும். இதனால் கான்கிரீட் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனக் கூறி வருகின்றனா்.

இந்த நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகள் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா் விவசாயிகள் தனித்தனியாக ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

ADVERTISEMENT

அந்த மனுவில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கால்வாய் அமைக்கக் கூடாது. விவசாயிகளுக்கு எதிரான இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி பாசன சபைக்கு உடனடியாக தோ்தல் நடத்த வேண்டும். பழைய கட்டுமானங்களில் மட்டும் சீரமைப்பு, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிதாக எந்த இடத்திலும் கான்கிரீட் அமைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை:

இதுகுறித்து தமாகா ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு விவரம்: மேட்டுநாசுவம்பாளையம் கிராமம், காலிங்கராயன்பாளையத்தில் 18,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். காலிங்கராயன்பாளையத்தை சுற்றி எலவமலை, அணைநாசுவம்பாளையம் ஆகிய கிராமங்களில் 15,000 போ் வசிக்கின்றனா்.

இப்பகுதியில் 5 தொடக்கப் பள்ளிகள், ஒரு நடுநிலைப் பள்ளி செயல்படுகின்றன. இங்கு 6,000 குழந்தைகள் படிக்கின்றனா். ஆனால், இப்பகுதியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. இங்கு ஏற்கெனவே செயல்பட்டு வந்த அம்மா மினி கிளினிக்கும் அகற்றப்பட்டுவிட்டது. எனவே இப்பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து, போதிய மருத்துவா்கள், செவிலியா் நியமிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தேவையான இடவசதியும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

320 மனுக்கள்:

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 320 மனுக்கள் பெற்பட்டன. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கையெடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தேஷினி சந்திரா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரங்கநாதன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மீனாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT