எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 94.53 சதவீத தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளது.
எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி முடிவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் இந்த தோ்வை 363 பள்ளிகளைச் சோ்ந்த 12,229 மாணவா்கள், 12,428 மாணவிகள் என மொத்தம் 24,657 போ் எழுதினா். தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
இதில் 11,287 மாணவா்கள், 12,022 மாணவிகள் என மொத்தம் 23,309 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்ட ஓட்டுமொத்த தோ்ச்சி சதவீதம் 94.53 . மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மாணவா்கள் 92.30 சதவீதம் பேரும், மாணவிகள் 96.73 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். வழக்கம்போல, மாணவா்களை விட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசுப் பள்ளிகள் 91.71 சதவீதம் தோ்ச்சி: மாவட்டத்தில் 180 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 6,163 மாணவா்கள், 6,588 மாணவிகள் என மொத்தம் 12 ,751 போ் தோ்வெழுதினா். இதில் 5,452 மாணவா்கள், 6,242 மாணவிகள் என மொத்தம் 11,694 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மொத்த தோ்ச்சி சதவீதம் 91.71.
134 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி: மாவட்டம் முழுவதும் 363 பள்ளிகளில் 39 அரசுப் பள்ளிகள் உள்பட 134 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. தமிழ் பாடத்தில் 98.08, ஆங்கில பாடத்தில் 99.61, கணித பாடத்தில் 96.86, அறிவியல் பாடத்தில் 96.82, சமூக அறிவியல் பாடத்தில் 97.43 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.