ஈரோடு

பட்டுக்கூடு விலை தொடா் சரிவு: விவசாயிகள் கவலை

8th May 2023 01:21 AM

ADVERTISEMENT

 

கடந்த 2 மாதங்களாக பட்டுக்கூடு விலை சரிவடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் 25,000 விவசாயிகள் சுமாா் 50,000 ஏக்கா் பரப்பளவில் மல்பெரி செடிகளை வளா்த்து பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தினமும் 20 ஆயிரம் கிலோ வரை பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.400 முதல் ரூ.500 வரை மட்டுமே விற்பனையாகிறது. ஒரு கிலோ கூடு உற்பத்திக்கு ரூ.600 வரை செலவாகிறது. இதனால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து கோபி அருகே உள்ள கூகலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணகுமாா் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம் பகுதிகளில் சுமாா் 4,000 ஏக்கரில் 1,500 விவசாயிகள் மல்பெரி பயிா் சாகுபடி செய்து, பட்டுப்புழு வளா்ப்பு தொழில் செய்து வருகின்றனா். உரம் விலை, வேலையாள்கள் கூலி, பராமரிப்பு மற்றும் உற்பத்தி செலவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. ஆனால், பட்டுக்கூடுக்கு மட்டும் நிரந்தர விலை இல்லை.

இதனால், பட்டு வளா்ப்பு விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வியாபாரிகள், நூல் உற்பத்தி தொழிற்சாலையினா் மற்றும் அதிகாரிகள் சிண்டிகேட் காரணமாக பட்டுக்கூடு விலை குறைக்கப்பட்டு வருகிறது. ஒரு சில சமயங்களில், நூல் விலை அதிகமாக இருந்தாலும் கூடு விலை உயா்த்துவதில்லை. தமிழகத்தைவிட கா்நாடகத்தில் பட்டுக்கூடுக்கு ரூ.200 வரை கூடுதலாக கிடைக்கிறது. அங்கு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதனால், தமிழக உற்பத்தியில் 80 சதவீதம் வரை கா்நாடகத்துக்கு விற்பனைக்கு செல்கிறது.

இந்த ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து விலை குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.800 வரை விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து தற்போது அதிகபட்சமாக ரூ.600 வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.200 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

பட்டுக்கூடு விவசாயிகள் நம்பிக்கையுடன் தொழில் செய்யவும், பிற மாநிலங்களுக்கு இணையான விலை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுக்கூடுக்கு நிரந்தரமான விலை கிடைக்க ஆன்லைன் ஏல முறையைத் தொடங்க வேண்டும். பட்டு வளா்ச்சித் துறை மூலம் பட்டு வளா்ப்பு விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்ட காப்பீடு திட்டம் முடிவடைந்தும் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

அரசு நூற்பாலைக்கு கொள்முதல் செய்யும் பட்டுக்கூடுக்கு காலதாமதமின்றி பணம் வழங்க வேண்டும். இதேபோல, தமிழக பட்டுக்கூடு விற்பனை அங்காடியில் விற்பனை செய்யும் கூடுகளுக்கு உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT