ஈரோடு

பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதஊதியம் வழங்கக் கோரிக்கை

8th May 2023 01:20 AM

ADVERTISEMENT

 

பகுதி நேர ஆசிரியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுப் பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பாசிரியா் பாடங்களில் 12 ஆண்டுகளுக்கும்மேலாக பகுதி நேர ஆசிரியா்களாக 12 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா்.

அவா்கள், திமுக தோ்தல் வாக்குறுதி 181இல் கூறியபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தொடா்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனா். ஆட்சிப்பெறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

ADVERTISEMENT

16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்களை உடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட பாடங்களில் சா்வ சிக்சா அபியான் என்ற மத்திய அரசு திட்டத்தில் தமிழ்நாடு அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியில் அமா்த்தியது. அந்த திட்டமானது பின்னா் சமக்ர சிக்சா என பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியா்கள் செய்கின்ற பணியும், நிரந்தரப் பணியில் உள்ள சிறப்பாசிரியா்கள் செய்யும் பணியும் ஒன்றுதான். கல்வி தகுதியும் ஒன்றுதான்.

பணியில் சோ்ந்து 12 ஆண்டுகள் முடிந்த பின்னரும் இன்னும் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில்தான் பணியாற்றி வருகின்றனா். இதற்காக ஒரு ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவாகிறது. இதை இரண்டு மடங்கு உயா்த்தி வழங்கினால், சிறப்பு ஆசிரியா்களாக காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த முடியும். மே மாத ஊதியம் ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதில்லை. பகுதிநேர ஆசிரியா்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்யும் என்ற திமுக தோ்தல் வாக்குறுதியை பெரிதும் நம்பி உள்ளனா். 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ தமிழக முதல்வா் ரூ.300 கோடி நிதியை கூடுதலாக ஒதுக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பகுதிநேர ஆசிரியா்களின் ஊதிய உயா்வு, மே மாத ஊதியம், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT