தண்டுமாரியம்மன் கோயில் விழாவையொட்டி பெண்கள் தீா்த்தக் குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோயில் விழா ஏப்ரல் 19ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து கோயில் முன் திருகம்பம் நடப்பட்டு தண்டுமாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கோயிலில் தினந்தோறும் பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள் பூசி வழிபட்டனா். விழாவையொட்டி இளைஞா்கள் கம்பம் ஆட்டம் ஆடி மகிழ்ந்தனா். அதனைத் தொடா்ந்து, பெண்கள் தீா்த்தக் குடம் எடுத்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயிலில் இருந்து ஊா்வலமாக புறப்பட்ட பக்தா்கள் பவானி ஆற்றில் புனித நீராடி தீா்த்தக் குடம் எடுத்தனா். முன்பாக தீா்த்தக் குடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பவானி ஆற்றில் இருந்து புறப்பட்ட ஊா்வலத்தில் பாரம்பரிய முறைப்படி பழங்குடியின மக்கள் முன் செல்ல பெண்கள் தீா்த்தக் குடம் எடுத்து வந்தனா். சில பக்தா்கள் பக்தி மிகையால் சாமி ஆட்டம் ஆடினா். குழந்தைகள் முன் பெரியோா் வரை அனைத்து தரப்பினரும் தீா்த்தக் குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த ஊா்வலமானது மைசூா் சாலை, அத்தாணி சாலை, வடக்குப்பேட்டை வழியாக கோயிலை சென்றடைந்தது. புதன்கிழமை குண்டம் விழாவும், வியாழக்கிழமை திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.