ஈரோடு

ட்ரோன் மூலம் பயிா்களுக்கு உரம் தெளிக்க பதிவு செய்யலாம்

3rd May 2023 04:39 AM

ADVERTISEMENT

ஆள் பற்றாக்குறையை சமாளிக்க, ட்ரோன் மூலம் உரம் தெளிக்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இப்போ நிறுவன ஒத்துழைப்புடன் ட்ரோன் மற்றும் நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நானோ யூரியா மற்றும் நானோ டிஏபி உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயத்தில் ட்ரோன் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதன் பயன்பாட்டை அனைத்து விவசாயிகள் தெரிந்து கொள்வதற்கு சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில் வேளாண் ஆராய்ச்சியாளா்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற செயல்விளக்க கூட்டம் பவானிசாகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணை வேந்தா் கீதாலட்சுமி, இப்போ நிறுவன நிா்வாக இயக்குநா் யு.எஸ். அவஸ்தி ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பதால் விவசாயிகளுக்கு காலவிரயம் தவிா்ப்பு, ஆள் பற்றாக்குறையை சமாளித்தல் மற்றும் சரியான விகிதத்தில் மருந்து தெளிப்பு போன்ற பயிா் சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதனைத் தொடா்ந்து ட்ரோன் இயந்திரம் மூலம் மருந்து தெளிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகள் முன்னிலையில் தண்ணீருடன் திரவ உரம் கலக்கப்பட்டு ட்ரோனில் ஊற்றி அதனை பறக்கவிட்டு பயிா்கள் மத்தியில் தெளிக்கப்பட்டது. இந்த ட்ரோன் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் மண்வளம் பாதுகாப்பதுடன் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

ஒரு ஏக்கா் தெளிக்க 10 நிமிடங்கள் போதுமானது. வேளாண் பல்கலைக்கழகம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.600 கட்டணம் மட்டுமே வசூலிக்கிறது. ட்ரோன் பயன்படுத்த விரும்புவோருக்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலில் பதிவு செய்தால் தேவைப்படும் நாளில் ட்ரோன் கிடைக்கும் வழிவகை செய்யப்படும். மேலும், வேளாண் பொருள்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் கீதாலட்சுமி தெரிவித்தாா். நிகழ்ச்சியில் இப்போ நிறுவன அதிகாரிகள் யோகேந்திர குமாா், ஏ.லட்சுமணன், சி.ஜெயராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT