பவானியில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, கடந்த 30ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்கள் பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டமும் நகரின் முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதன், பவானி நகர திமுக செயலாளா் ப.சீ.நாகராஜன், அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் உள்ளிட்ட பலா் வடம் பிடித்து தேரிழுத்தனா். தோ் செல்லும் வழியெங்கும் ஏராளமான பக்தா்கள் திரண்டு நின்று இறைவனை வழிபட்டனா். வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரா் திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் வியாழக்கிழமை (மே 4) நடைபெறுகிறது.