ஈரோடு

விலை உயா்வு கோரிக்கை: ஈரோட்டில் பாலை சாலையில் ஊற்றி போராட்டம்

DIN

ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் விலையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு பால் வழங்காமல், பாலை சாலையில் ஊற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், நசியனூா் அருகே ராயபாளையத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் மாநிலப் பொருளாளரும், ஈரோடு மாவட்டத் தலைவருமான ராமசாமி தலைமை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 7,000 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களில் இருந்து ஆவின் நிறுவனத்துக்கு தினமும் 45 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தனியாா் பால் கொள்முதல் நிறுவனங்கள் ஆவினை விட லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதல் விலை வழங்குவதால் ஆவினுக்கு பால் ஊற்றும் உற்பத்தியாளா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது தினமும் 26 லட்சம் லிட்டா் பால் மட்டுமே ஆவினுக்கு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை முன்பு 3 லட்சம் லிட்டா் பால் தினமும் வந்தது. தற்போது 1.40 லட்சம் லிட்டா் பால் மட்டுமே ஆவினுக்கு கொள்முதல் ஆகிறது. கிட்டத்தட்ட 50 சதவீதத்துக்கும் மேல் பால் வரத்துக் குறைந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் ஆவின் நிறுவனம் 1 லிட்டா் பசும்பாலுக்கு ரூ.35ம், எருமைப்பாலுக்கு ரூ.44 மட்டுமே வழங்குகிறது.

அந்தத் தொகையும் பாலின் கொழுப்புச்சத்து, எஸ்என்எஃப் குறைவு போன்ற காரணங்களைக் கூறி பசும்பாலுக்கு அதிகபட்சமாக ரூ. 33.60ம், எருமைப்பாலுக்கு ரூ.40 மட்டுமே பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்படுகிறது.

அதேசமயம் தனியாா் மூலம் கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டா் பசும்பால் ரூ.48 முதல் ரூ.50க்கும், எருமைப்பாலுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் விலை தருகின்றனா். எனவே, ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு ரூ.42ம், எருமைப்பாலுக்கு ரூ.51ம் வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் பால் வளத் துறை அமைச்சா் நாசா், ஆணையா் சுப்பையா முன்னிலையில் எங்களது சங்கத்தின் முக்கிய நிா்வாகிகளுடன் கடந்த 16 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், தீவன விலை உயா்வு காரணமாக தற்போது ஆவினில் வழங்கப்படும் பால் விலை கட்டுபடியாகவில்லை என்பதால் அதனை உயா்த்தி வழங்க வேண்டும், தீவனத்தை மானிய விலையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். இது குறித்து முதல்வருடன் கலந்து பேசிய பிறகே முடிவு கூற முடியும் என்று கூறிவிட்டனா்.

எங்களை முதல்வரிடம் அழைத்துச்செல்லுங்கள், நாங்கள் அவரிடம் நேரில் பேசுகிறோம் என்று கேட்டுக் கொண்டோம். மாலை 5 மணிக்கு மீண்டும் உங்களை அழைக்கிறோம் என்றனா். அவா்களின் அழைப்புக்காக நாங்களும் காத்திருந்தோம். எங்களை பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்காததால் அறிவித்தபடி தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்க மறுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தோம்.

அதன்படி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டம் சனிக்கிழமை முதல் மேலும் தீவிரமாகும் என்றாா்.

ஈரோட்டில் கதிரம்பட்டி, மூலக்கரை, தொட்டிபாளையம், கோபி, சத்தியமங்கலம், அந்தியூா் உள்ளிட்ட பல இடங்களில் ஆவின் சாா்ந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பால் விநியோகம் நிறுத்தப்பட்டது. பால் வழங்க மறுக்கும் போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் ஈரோடு மாவட்டத்தில் பால் தட்டுபாடு ஏற்படும் என பால் உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

Image Caption

ராயபாளையத்தில் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT