ஈரோடு

2 லட்சம் விதைப் பந்துகள்: அரசுப் பள்ளி மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

30th Jun 2023 11:40 PM

ADVERTISEMENT

3 ஆண்டுகளில் 2 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கிய ஈரோட்டை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவரை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பாராட்டினாா்.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் எஸ்.பி. மேகன் என்ற மாணவா் உரம் மற்றும் விதைகளின் மூலம் பந்துபோல உருவாக்கி விதைப் பந்துகளை தயாரித்துள்ளாா்.

இந்த விதைப் பந்துகளை காலியான இடத்தில் வீசி எறியும்போது மழை அல்லது நீரின் மூலம் செடியாக உருவாகிறது.

இந்தச் செடிகள் பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கான தீவன பயிா்கள், கீரைகள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவைகளாக வளா்கின்றன.

ADVERTISEMENT

இந்த மாணவா் கடந்த மூன்று ஆண்டுகளாக விதைப் பந்துகளை உருவாக்கி வருகிறாா். இதுவரை சுமாா் 2 லட்சம் விதைப் பந்துகளை அவரது பெற்றோரின் உதவியுடன் உருவாக்கியுள்ளாா். இவா் உருவாக்கிய விதைப் பந்துகளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தன்னாா்வலா்களுக்கும் வழங்கியுள்ளாா். மாணவா் எஸ்.பி.மேகன் ‘வனப் பந்து’ என்ற தலைப்பில் புத்தகத்தையும் எழுதியுள்ளாா்.

எஸ்.பி.மேகனை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைத்த மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, அவரது செயலை பாராட்டினாா்.

இதுபோன்ற விழிப்புணா்வை மற்ற மாணவ, மாணவிகளிடமும் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் மாணவ, மாணவிகள் முழு ஈடுபாட்டுடன் நா்சரி பூங்காக்களை வளா்க்க வேண்டும் என்று கல்வித் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ், மாணவரின் தந்தை பாலமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT