ஈரோடு

பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

30th Jun 2023 11:47 PM

ADVERTISEMENT

பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசினாா்.

ஈரோடு சோலாா் பகுதியில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது: 2014 இல் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5 ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு பிரதமா் மோடிதான் காரணம்.

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதனால்தான் பிரதமா் தற்போது இது குறித்து அறிவித்துள்ளாா். பொதுசிவில் சட்டம் என்பது காலத்தின் கட்டாயம் என்று அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, வழக்குகளில் சிக்கிய இரண்டு அமைச்சா்களை பதவி நீக்கம் செய்தாா். ஆனால், தற்போதைய முதல்வா், ஊழல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜியை காப்பாற்றத்

துடிக்கிறாா். எல்லா ஊழல்வாதிகள் மீதும் தமிழக ஆளுநா் நடவடிக்கை எடுத்தால் தமிழக அமைச்சரவையே காலியாகிவிடும். மக்களவைத் தோ்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற்று

மோடி மீண்டும் பிரதமா் ஆவாா். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றிபெறும். தமிழக பாஜக சாா்பில் வெற்றிபெறுபவா்கள் கேபினட் அமைச்சா்களாக பதவி வகிப்பாா்கள் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளும் கைப்பேசி செயலி குறித்த அறிவிப்புப் பதாகையை வெளியிட்டாா்.

முன்னதாக, கீழ்பவானி பாசனத்தின் தந்தை என போற்றப்படும் தியாகி ஈஸ்வரனின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய அண்ணாமலை, அவரது குடும்ப வாரிசுகளைக் கௌரவித்தாா்.

கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் வி.சி.வேதானந்தம், பிற்படுத்தப்பட்டோா் அணி தலைவா் ஆற்றல் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT