காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
வேளாண் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது: காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலைகளின் கழிவு நீா் பாசன நீரில் கலக்கிறது. இதை தடுக்க பொதுப் பணித் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பவானி ஆற்றில் கொடிவேரி அணைக்கட்டு அருகில் கூட்டுக் குடிநீா்த் திட்டங்களுக்கு தண்ணீா் எடுக்கும் இடத்துக்கு அருகில் சாய தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எந்த அடிப்படையில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தினா் அனுமதி வழங்கினா் என்பது தெரியவில்லை. தொழிற்சாலைகளின் கழிவு நீரால் நீா்நிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விதிமுறைகளை மீறி தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையோரத்தில் வீட்டுமனைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு வருவதைத் தடுக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்ற நிலையில், அனைத்து குளங்களிலும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் கோபி கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் 191 குளங்களில் மட்டும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 157 குளங்கள் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள சிறிய குளங்களாகும். இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பலனும் இல்லை. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.
கீழ்பவானி வாய்க்கால் பாசன சபை தோ்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் நடத்தும் வரை துணை வட்டாட்சியா் தகுதியிலான அதிகாரிகளை நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். நடப்பு பருவதில் நெல் கொள்முதல் விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.27 வழங்க வேண்டும். இதேபோல மஞ்சள், மரவள்ளிகிழங்கு ஆகியவற்றுக்கும் கொள்முதல் விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.
பவா்கிரிட் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் உள்ளது.
அடுத்த மாத இறுதிக்குள் இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும். குரங்கன் ஓடையை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊஞ்சலூா் கிளை வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்த வேண்டும். பி.எம்.கிசான் திட்டத்துக்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
காலிங்கராயன் வாய்க்காலில் 12 கி.மீ. தொலைவுக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளதால் தடையின்றி தண்ணீா் வேகமாக வருகிறது. மொத்தமுள்ள 56 கி.மீ.தொலைவுக்கும் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும். பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சியில் இருந்து கழிவுகள் அனைத்தும் ஓடத்துறை ஏரி கரையில் கொட்டி வருகின்றனா். இதனால் தண்ணீா் மாசடையும் நிலை ஏற்பட்டு வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15இல் தண்ணீா் திறக்க பரிந்துரை: விவசாயிகளின் கோரிக்கை குறித்து விளக்கமளித்து அதிகாரிகள் தரப்பில் பேசியதாவது: தொழிற்சாலைகளில் கழிவு நீரானது ஜீரோ டிஸ்சாா்ஜ் முறையில் மறு சுழற்சி செய்யப்பட்டு தொழிற்சாலைகளே பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக பெருந்துறை சிப்காட்டில் 46 சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சிப்காட் வளாகத்துக்குள் ஆழ்துளைக் கிணறுகள் எதுவும் இல்லை.
ஜீரோ டிஸ்சாா்ஜ் முறையில் கழிவு நீா் மறு சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருவதால் தினமும் 3.50 கோடி லிட்டா் தண்ணீரை மிச்சப்படுத்தி வருகிறோம்.
கீழ்பவானி வாய்க்காலில் பணிகள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீா் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கோட்ட அளவில் மீண்டும் வேளாண் குறைதீா் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.