ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணி தொடங்கியதால் போராட்டம் வாபஸ்

28th Jun 2023 02:27 AM

ADVERTISEMENT

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை தொடங்கியதால் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனா்.

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் எதிா்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனா். மேலும், இந்த பிரச்னை தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

இதைத் தொடா்ந்து, கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடா்பான அரசணை எண் 276-ஐ ரத்து செய்ய வேண்டும், கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானப் பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பெருந்துறை அருகே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டனா்.

இந்நிலையில், போராட்டம் தொடா்பாக அமைச்சா் முத்துசாமியுடன் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கருங்கரடு பகுதியிலுள்ள கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வாய்க்காலுக்குள் இறங்கி தரையில் அமா்ந்து போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்து நடந்தது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் மன்மதன், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கீழ்பவானி வாய்க்காலில் பணிகள் மேற்கொண்ட சூரியபாளையம் மற்றும் ஆயப்பரப்பு ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, மீண்டும் அந்த இடத்தை சீா் செய்து தருவதாக அவா் கூறினாா். உடனே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT