கோபி அருகே பாலம் கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து மண்ணில் புதைந்த தொழிலாளியை தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை உயிருடன் மீட்டனா்.
கோபியை அடுத்த டி.ஜி.புதூா் நால்ரோடு அருகேயுள்ள காளியூா் காலனி பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வடமாநில தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். பாலத்தின் பக்கவாட்டில் இரும்புத் தகரம் பொருத்தும் பணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கட்டுமான தொழிலாளி விகாஷ் மாா்க்கி (19) எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். இதில் அவா் மீது மண் சரிந்து விழுந்து முற்றிலும் அவரை மூடியது.
உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து 45 நிமிட போராட்டத்துக்குப் பின் விகாஷ் மாா்க்கியை உயிருடன் மீட்டனா். அவருக்கு உடலில் சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.